ADDED : டிச 06, 2025 02:00 AM
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, விரைந்து தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில், கால தாமதத்தை கைவிடக்கோரி, உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழக மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் கூறிய தாவது:
தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு, 1,500 மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து திரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கான தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்துகிறது.
கால தாமதத்தை கைவிடுவதுடன், கல்லுாரி உள்ளூற பயிற்சியை, மூன்று ஆண்டுகள் வரை வழங்குவதை கைவிட வேண்டும்.
மேலும், மருத்துவ கல்லுாரிகளில், வெளிநாட்டு பிரிவு மாணவர்கள் பயிற்சிக்கான ஒதுக்கீட்டை, 7.5 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். அத்துடன், விடுதி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., முதல் வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

