மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்காரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவர் கைது
மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்காரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவர் கைது
ADDED : டிச 09, 2024 04:18 AM

சென்னை : மனவளர்ச்சி குன்றிய, 21 வயதான கல்லுாரி மாணவியை மிரட்டி, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயதான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி, கல்லுாரி ஒன்றில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
அவரது தாய், 2022ல் இறந்து விட்டார். மாணவியை அவரின் தந்தை தான் வளர்த்து வருகிறார். தினமும் ஆட்டோவில் கல்லுாரிக்கு சென்று வரும் மாணவியின் மொபைல் போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
புகார் மனு
இதுகுறித்து மாணவியின் தந்தை, நவம்பர், 7ல், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த இடம், எழும்பூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், புகார் மனு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில், மாணவிக்கு பாலியல் ரீதியாக மிகப்பெரிய கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் உத்தரவின்படி, அயனாவரம் மற்றும் எழும்பூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், பாதிக்கப்பட்ட மாணவியிடம், அவருக்கு சவுகரியமாக உள்ள இடத்தை கேட்டு, அங்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மாணவியுடன், அரக்கோணத்தை சேர்ந்த சந்தியா என்பவர் படித்து வருகிறார். இவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, நந்தனம் கல்லுாரி மாணவர் சுரேஷ், 20, பழக்கமாகி உள்ளார்.
அவர் வாயிலாக, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 19 வயதான அரசு பள்ளி மாணவர் ஒருவரும் அறிமுகமாகி உள்ளார். இவர்கள் இருவரையும் மற்றும் சீனு என்ற நபரையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சந்தியா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த மூவரும், பாதிக்கப்பட்ட மாணவி, மன வளர்ச்சி குன்றியவர் என்பதை சாதகமாக பயன்படுத்தி, அவருடன் மொபைல் போனில் பேசி, காதல் வலையில் விழ வைத்துள்ளனர்.
மூவரும் காதலிப்பது போல நடித்து, மாறி மாறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று, விலை உயர்ந்த சாக்லெட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மொபைல் போன் வாயிலாக, ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் உணர்வுகளையும் துாண்டி உள்ளனர்.
சிக்கித்தவிப்பு
மாணவி தினமும் கல்லுாரிக்கு ஆட்டோவில் தான் செல்வார். அவர் ஆட்டோவில் செல்லும் போதே, கல்லுாரிக்கு உள்ளே செல்ல வேண்டாம்.
வெளியே போகலாம் என, மாணவியை அழைத்து சென்று, வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதேபோல, மொபைல் போன் செயலி ஒன்றின் வாயிலாக, திருத்தணியை சேர்ந்த கவி, மணி, அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக், அம்பத்துார் பாண்டியன், கோயம்பேடை சேர்ந்த ரோஷன் ஆகியோரும் மாணவியுடன் பழகி, பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களிடம் ஓராண்டாக மாணவி சிக்கி தவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கல்லுாரி மாணவர் சுரேஷும், பள்ளி மாணவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுரேஷ் புழல் சிறையிலும், பள்ளி மாணவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். மாணவியின் தோழியிடம் விசாரணை நடக்கிறது.
பாதிக்கப்பட்டவர் மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால், புலன் விசாரணை செய்வது விசாரணை அதிகாரிக்கு சவாலாக உள்ளது. நான்கு தனிப்படைகள் அமைத்து, மற்றவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.