ADDED : ஜூலை 28, 2025 02:35 AM
சென்னை: மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 12-0 அடியை எட்டியுள்ளதால், உபரி நீரை 16 கண் மதகு வழியே, சீராக திறந்து விடும்படி, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து, கடந்த மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின், ஜூன் 15ம் தேதி கல்லணை மதகுகள் வழியே நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், மழைப் பொழிவு அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 35,000 முதல் 70,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 75,400 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.
பாதுகாப்பு காரணமாக, 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கவும், கிடைத்த உபரி நீரை குளங்கள், ஏரிகள், சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பி விடவும், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் வைத்து, விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

