ADDED : அக் 27, 2025 12:48 AM

திருப்பூர்: 'இருபத்தைந்து கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதித்துள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும்' என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நேற்று நடந்தது. கூட்ட தீர்மானங்களை விவரித்து, மாநில தலைவர் துளசிங்கம் கூறியதாவது:
தமிழகம் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் மாநிலம். சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து சதவீத வரி ரத்து செய்யப் படும் என்று எதிர்பார்த்து இருந்தோம் .
ஆனால், அறிவிப்பு வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது. இந்த வரியை ரத்து செய்ய வேண்டும்.
வேளாண்மை துறை அதிகாரிகள், அரிசி ஆலைகள் நேரடியாக விவசாயி களிடம் வாங்கும் நெல் லுக்கும், வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் நெல்லுக்கும் சந்தை கட்டணமாக, 1 சதவீதம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதை நீக்க வேண்டும்.
எண்ணெய் ஆலைகளுக்கு, அரிசி ஆலைகளில் இருந்து அனுப்பும் தவிட்டுக்கு, 5 சதவீதம் வரி விதிப்பதையும் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு துளசிங்கம் கூறினார்.

