ஆந்திரா, தெலுங்கானாவில் ஆய்வுக்கு பின் வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுப்போம் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
ஆந்திரா, தெலுங்கானாவில் ஆய்வுக்கு பின் வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுப்போம் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
ADDED : மார் 20, 2025 12:46 AM
சென்னை:''ஆந்திராவில் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் உள்ளது. அதுபற்றி தமிழக அதிகாரிகள், ஆந்திரா, தெலுங்கானா சென்று, இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
''அவர்கள் அறிக்கை அளித்த பின், தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பா.ஜ., - எம்.ஆர்.காந்தி: நாகர்கோவில் தொகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் சக்கரபாணி: நாகர்கோவில் தொகுதியில், 31 முழு நேர, 10 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. எனவே, நடமாடும் ரேஷன் கடை அமைப்பதற்கான தேவை எழவில்லை.
எம்.ஆர்.காந்தி: காலையில் ஏழைகள் வேலைக்கு சென்று விடுகின்றனர். வீடு திரும்ப இரவாகிறது. குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைக்கு சென்றால், பொருள் கிடைப்பதில்லை. எனவே, அரசு நடமாடும் வாகனம் வழியே, சென்று பொருட்களை வழங்கினால், மக்களுக்கு எளிதாக இருக்கும்.
அமைச்சர் சக்கரபாணி: மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை, கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன. நகரும் ரேஷன் கடை எங்கு திறக்க வேண்டும் என குறிப்பிட்டு கூறினால், அதை திறக்க அரசு பரிசீலிக்கும்.
தி.மு.க., - கருணாநிதி: பல்லாவரம் தொகுதியில், உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் சக்கரபாணி: வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: கர்நாடகாவில், பெரிய மளிகைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு, எந்த நேரத்திலும் பொருள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் செய்ய அரசு முன்வருமா?
அமைச்சர் சக்கரபாணி: ஆந்திராவில் வீட்டிற்கு சென்று, ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இன்று, அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, ஆய்வு செய்ய உள்ளனர்.
அவர்கள் அறிக்கை அளித்ததும், அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.