அரசு மருத்துவமனை கட்டடங்களை அடிக்கடி ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு
அரசு மருத்துவமனை கட்டடங்களை அடிக்கடி ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு
ADDED : அக் 26, 2024 07:38 AM
சென்னை : ''மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை, கண்காணிப்பு பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு சமீபத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மருத்துவமனைகளின் டீன்கள் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இக்கட்டடங்களை பராமரிக்கும் பொதுப்பணி துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், துறையின் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.
துறை செயலர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
நடந்து வரும் கட்டுமானப் பணிகளை தரத்துடன் குறித்த காலக்கெடுவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து துவங்க, தேவையான தொடர் நடவடிக்கைகளில் பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை, கண்காணிப்பு பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பராமரிப்பு பணிகள் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனை மற்றும் பொது கட்டடங்களில், பெரும்பாலான மின்துாக்கிகள் முறையான பராமரிப்பில் இல்லை என்ற புகார்கள் எழுகின்றன.
எனவே, முறையான பராமரிப்புடன் மின்துாக்கிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தலைமை பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். மின் சாதனங்கள் பராமரிப்பில் கண்காணிப்பு பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்கள், அனைத்து கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். கட்டடங்களில் நீர் கசிவு ஏற்படாத வகையில், நீர் புகாத பூச்சு நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்.
'எம் - சாண்ட்' சுவர் பூச்சு பயன்பாட்டுக்கு, 'கெமிக்கல்' கலவையை பயன்படுத்த வேண்டும். கட்டட பராமரிப்பு பணிகளின்போது, தற்போது நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.