உதயநிதி தீர்மானத்திலும் பேசுவேன் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
உதயநிதி தீர்மானத்திலும் பேசுவேன் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
ADDED : ஏப் 16, 2025 12:16 AM
“மாநில சுயாட்சி தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலினை போல நாளைக்கு, துணை முதல்வர் உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும், அதில் பங்கெடுத்து பேசுவேன்,” என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் , அவர் பேசியதாவது:
இதேபோன்ற தீர்மானத்தை, கருணாநிதி 1974ம் ஆண்டு கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது, 50 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதிலும், பேசும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
நான் நீண்ட நெடிய காலம் அரசியலில் இருக்கிறேன். அந்த நீண்ட நெடிய காலத்திற்கு வழிவகுத்தவர்கள் கருணாநிதியும், ஸ்டாலினும் தான். நாளைக்கு ஒரு வேளை, உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும், நான் பேசுவேன்.
ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் ஆட்சியில் இருந்தால், மாநிலங்களுக்கு உரிய உரிமைகளை தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தருவோம் என்கின்றனர். இவர்களை எதிர்ப்பதற்கு ஒருவர் தோன்ற வேண்டும்.
அதன்படி, 50 ஆண்டுகளுக்கு பின், மாநில சுயாட்சி குறித்த வாதத்தை ஸ்டாலின் முன்வைத்துள்ளார். தன் தந்தை கருணாநிதி கொண்டு வந்த தீர்மானத்தின் கருத்தை உள்வாங்கி, அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது, நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.