சாலை சந்திப்பில் 200 மீட்டர் துாரத்தில் இருந்தால் பெட்ரோல் பங்குகளுக்கு தடையில்லா சான்று அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சாலை சந்திப்பில் 200 மீட்டர் துாரத்தில் இருந்தால் பெட்ரோல் பங்குகளுக்கு தடையில்லா சான்று அமைச்சர் எ.வ.வேலு தகவல்
ADDED : மார் 18, 2025 10:06 PM
சென்னை:''பெட்ரோல் பங்குகள் அமைக்க, விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன,'' என, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
வி.சி., - எஸ்.எஸ்.பாலாஜி: பெட்ரோல் பங்குகள் அமைக்க, தடையில்லா சான்றிதழ் வழங்க அரசு நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.
அமைச்சர் எ.வ.வேலு: நெடுஞ்சாலை துறையில், பெட்ரோல் பங்க் அமைக்க, தடையில்லா சான்று பெற, பெருமளவு விண்ணப்பங்கள் வருவதால், நகர் பகுதி, கிராமப் பகுதி என வகைப்படுத்தப்பட்டு, அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, விதிமுறைகளுக்கு உட்பட்டு, தடையில்லா சான்று வழங்கப்படுகிறது. சாலை சந்திப்பில் இருந்து, 200 மீட்டர் துாரத்தில் இருந்தால் தடையில்லா சான்று வழங்கப்படும்.
பாலாஜி: அரசாணை வெளியிட்டதற்கு நன்றி. நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
நகர் பகுதிகளில், நெடுஞ்சாலைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவற்றில் இருந்து வரும் வாகனங்கள், உள்ளே செல்லும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் சேருகின்றன. இதற்கும் விதிமுறை ஏற்படுத்தப்படுமா?
அமைச்சர் வேலு: நகரப் பகுதிகளில் கட்டுமானம் அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் ஒரு கார் என்ற நிலை மாறி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனி கார் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கார்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், பெட்ரோல் பங்க்குகளும் அதிகரித்து வருகின்றன.
பெட்ரோல் பங்க் செல்ல, 'கட்டிங்' வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால் விபத்து ஏற்படும். இதை தடுக்கவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் கூறுவது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
பாலாஜி: திருப்போரூர் தொகுதியில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையை மேம்படுத்த வேண்டும். திருப்போரூர் - நெம்மேலி சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அமைச்சர் வேலு: திருச்செந்துார் மற்றும் ராமேஸ்வரத்தில், புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும்.
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்லும் பாதையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். கோவில் நிதி அல்லது மாநில நிதியில் பணி மேற்கொள்ளப்படும்.
அ.தி.மு.க., - உதயகுமார்: மதுரை கப்பலுார் சுங்கச்சாவடி விதிமுறைக்கு மாறாக அமைந்துள்ளது. மாநில அரசு பரிந்துரை செய்தால் அகற்றப்படும் என, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நகராட்சியில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் அமைந்துள்ளதால், அதை அகற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அமைச்சர் வேலு: எனக்கும் உடன்பாடு தான். இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். உள்ளூர் மக்களுக்கு, 'பாஸ்' வழங்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.