மும்மொழியை ஏற்றால் நிதி என்கின்றனர் அமைச்சர் மகேஷ் குற்றச்சாட்டு
மும்மொழியை ஏற்றால் நிதி என்கின்றனர் அமைச்சர் மகேஷ் குற்றச்சாட்டு
ADDED : டிச 24, 2024 07:21 AM
சென்னை : ''மும்மொழி கொள்கையை நீங்கள் ஏற்றால், ஒரு வினாடியில் நிதி ஒதுக்குகிறேன் என, மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், இரு மொழி கொள்கை என்பது நமது கொள்கை முடிவு,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதுவரை சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா, ஜப்பான் நாடுகளுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று 42 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவர், அலுவலர்கள் இருவர் என மொத்தம், 45 பேருடன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். வரும் 27ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.
சிங்கப்பூர் செல்வதற்கு முன், சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஓவிய கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது, அமைச்சர் அளித்த பேட்டி:
தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், போட்டிகளில் வெற்றி பெற்று, சிங்கப்பூர் கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சாதனை புரியும், நம் மாணவர்களையும், ஆசிரியர்களையும், மத்திய அரசு ஏமாற்றுகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, கல்வி நிதியை தராமல் வஞ்சிக்கிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால், நம் குழந்தைகளுக்கான கல்வியை நாமே வழங்குவோம்.
பள்ளிகளுக்கான இணையதள கட்டணத்தை செலுத்தவில்லை என்பது தவறு. மத்திய அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய, 2,154 கோடி ரூபாயை நிலுவை வைத்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வகுத்துள்ள 20 திட்டங்களில், 18ஐ செயல்படுத்துகிறோம். மும்மொழி கொள்கை, பி.எம்., ஸ்ரீ திட்டங்களை நாம் ஏற்கவில்லை.
அதை ஏற்காததால், 2018 முதல் வழங்கி வந்த நிதியை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து முறையிட்டோம். அவர், 'ஹிந்தி பேசாத எங்கள் ஒடிசா மாநிலமே, மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுஉள்ளது. நீங்களும் ஏற்றால், ஒரு வினாடியில் நிதி ஒதுக்குகிறேன்' என்றார்.
இரு மொழி கொள்கை என்பது, அண்ணாதுரை காலத்தில் இருந்து, தமிழகம் எடுத்துள்ள கொள்கை முடிவு என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.