டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர் பழனிசாமி; அமைச்சர் மகேஷ் குற்றச்சாட்டு
டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர் பழனிசாமி; அமைச்சர் மகேஷ் குற்றச்சாட்டு
ADDED : ஆக 10, 2025 03:16 AM

திருச்சி : “தமிழக முதல்வராக இருந்தபோது, டெண்டர் விடுவதில் மட்டும் தான் பழனிசாமி கவனம் செலுத்தினார்,” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், 3.12 சதவீதமாக இருந்த வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியில் வெகுவாக குறைந்து, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், 11.19 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரட்டை இலக்கத்தை எட்டியதாக மத்திய அரசே கூறியுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் தன் வசம் வைத்துக்கொண்டு, டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
தமிழக வளர்ச்சிக்கு, அவர் கவனம் செலுத்தவில்லை. எனவே, தமிழக வளர்ச்சிக்கு, தானே காரணம் என்ற பெயரை எடுத்துக்கொள்ள வேண்டும் என, பழனிசாமி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
'மாணவர்கள் கனவு மட்டும் கண்டால் போதும், அதை நிறைவேற்றித் தருகிறோம்' எனக் கூறுவது தான் மாநில கல்விக் கொள்கை. அவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காக, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளோம்.
தமிழகத்தில் மூன்றாவது மொழியாக, 22வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் படிக்க வைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
தமிழ் மொழி, கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமாக உருவாக்கப்பட்டது தான் மாநில கல்விக் கொள்கை.
இதை, மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், மாணவர்கள் உயர் நிலையை அடைவர். மாநில கல்விக் கொள்கையின் பயன்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு, அது பற்றிய விமர்சனங்களை பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

