ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு உடனடி விசாரணை அமைச்சர் மகேஷ் உத்தரவு
ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு உடனடி விசாரணை அமைச்சர் மகேஷ் உத்தரவு
ADDED : ஆக 15, 2025 12:49 AM
சென்னை:பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மீது, உடனடியாக விசாரணை நடத்தும்படி, பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வி துறை சார்ந்த திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில், துறை அதிகாரிகளுடன், பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் கூறியுள்ளதாவது:
இந்தாண்டுக்குள், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், 'ஹைடெக் லேப்' உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.
இந்தாண்டு, அரசு பள்ளி களில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகளவில் மாணவர்களை சேர்த்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் .
முக்கியமாக, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மீதான புகார்கள் மீது, உடனடியாக விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.