விரக்தியில் வௌியிட்ட அறிக்கை ரவி மீது அமைச்சர் நேரு பாய்ச்சல்
விரக்தியில் வௌியிட்ட அறிக்கை ரவி மீது அமைச்சர் நேரு பாய்ச்சல்
ADDED : ஆக 15, 2025 01:16 AM
சென்னை:'மாநில அரசுக்கு நண்பராக இருக்க வேண்டியவர், எதிரிக்கட்சியாக நின்று, வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்' என, தி.மு.க., அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'தமிழகத்தில், இளைஞர்கள் மத்தியில், ரசாயன போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது' என, கவர்னர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தின தேநீர் விருந்துக்கு, அரசியல் கட்சிகளுக்கு, அவர் விடுத்த அழைப்பை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனால் விரக்தியில் வெம்பி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
சுதந்திர தின செய்தியில் கூட, நாகரிகம் இல்லாமல், ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில், அவதுாறுகளை அள்ளி வீசியிருக்கிறார். கவர்னரின் அறிக்கையை படித்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே சிரிப்பார். மத்திய அரசு, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களுக்கு, கவர்னர் என்ற நச்சு பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுத்து வருகிறது.
ராஜ்பவனை கவர்னர் ரவி அரசியல் பவனாக மாற்றி, கரை வேட்டி கட்டிய அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.
மாநில அரசுக்கு நண்பராக இருக்க வேண்டியவர், எதிரிக்கட்சியாக நின்று, வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.