தவறான தகவல்களை தராதீங்க பழனிசாமிக்கு அமைச்சர் வேண்டுகோள்
தவறான தகவல்களை தராதீங்க பழனிசாமிக்கு அமைச்சர் வேண்டுகோள்
ADDED : நவ 01, 2025 12:50 AM
சென்னை: 'நெல் கொள்முதல் குறித்து தவறான தகவல் தெரிவிப்பதை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிறுத்த வேண்டும்' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில், அந்த ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பில், நடப்பு நெல் கொள்முதல் பருவத்தில், மார்ச், 31ம் தேதி வரை நடந்த கொள்முதல் விபரம் மட்டுமே குறிப்பிடப்படும்.
பின், ஏப்ரல் முதல் அந்த பருவம் முடிவடையும் ஆக., 31ம் தேதி வரை, நெல் கொள்முதல் செய்யப்படும். இந்த சாதாரண விஷயத்தை புரிந்து கொள்ளாமல், 'முதல்வர் பொய் சொல்கிறார்' என்று பழனிசாமி பேசி வருகிறார். கடந்த, 2021 - 22ல், 2021 மே, 7 முதல் செப்., 30 வரை, 14.38 லட்சம் டன் நெல், அந்த ஆண்டின் முழு சீசனில், 43.27 லட்சம் டன்; 2022 - 23ல், 44.22 லட்சம்; 2023 - 24ல், 34.95 லட்சம்; 2024 - 25ல், 47.99 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சீசனில் செப்., 1 முதல் அக்., 30 வரை, 15.90 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 11.78 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய அரசு, ஆக., 18ம் தேதி அனுமதி வழங்கியதாக பழனிசாமி கூறியிருந்தார். இதையே முன்னாள் அமைச்சர் காமராஜ், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் கூறினர்.
ஆனால், அக்டோபர், 30ல், மத்திய உணவு துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து, செறிவூட்டப்பட்ட அரிசிக்கான சோதனை சான்றை விரைந்து வழங்க வலியுறுத்தினேன்.
அன்புமணி, வடமாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
கடந்த, 33 நாட்களில், காஞ்சிபுரத்தில், 20,017; திருவள்ளூரில், 34,314 ; திருவண்ணாமலையில், 20,852 ; விழுப்புரத்தில், 503 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அக்., 30ம் தேதி வரை, 1,892 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 11.78 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 1.52 லட்சம் விவசாயிகளின் வங்கி கண க்கில், 2,840 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

