மாற்றுத்திறனாளிகள் போராட்டம் கைவிட அமைச்சர் வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் கைவிட அமைச்சர் வேண்டுகோள்
ADDED : பிப் 23, 2024 02:14 AM
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குனர் லட்சுமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர், பிப்., 13 முதல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பு, உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்க உறுப்பினர்களிடம், கடந்த 17, 21ம் தேதி, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பேச்சு நடந்தது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 1,768 இடைநிலை ஆசிரியர்கள், 2,582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் முறையே, 70 மற்றும் 117.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை திரும்பப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து அரசு துறைகளிலும், மதிப்பெண் அடிப்படையிலான பணிமூப்பு மறுவரையறை பணி நடந்து வருகிறது.
இப்பணி முடிந்த பின், மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நெறிமுறைகள் அரசால் வெளியிடப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை, அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, போராட்டத்தை கைவிடும்படி, அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.