அவருக்கு என்ன நெருடல்; பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
அவருக்கு என்ன நெருடல்; பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
ADDED : ஜன 04, 2025 12:39 PM

சென்னை; மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல், அவரது தேவை என்ன என்பதை அறிந்து நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தி விட்டீர்களா, போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன, ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அனுமதியை ரத்து செய்து கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்.
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் மா.கம்யூனிஸ்டின் இந்த குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. முன்பு விடுதலை சிறுத்தைகள், இப்போது இடதுசாரிகள் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இந் நிலையில் பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது;
ஜனநாயக நாடு. இந்த ஆட்சியில் கடந்தாண்டில் தான் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த ஆட்சிக்காலம்.
இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூட ரிமாண்ட் செய்யப்படவில்லை. நேற்று வரை ஆட்சியை பாராட்டியவர் (பாலகிருஷ்ணன்). அவருக்கு என்ன நெருடல், தேவை என்ன என்பது புரியவில்லை. அதை கேட்டு நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.