டாக்டர்கள் நியமனத்தில் முறைகேடு எதுவும் இல்லை: அமைச்சர் உறுதி அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
டாக்டர்கள் நியமனத்தில் முறைகேடு எதுவும் இல்லை: அமைச்சர் உறுதி அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
ADDED : பிப் 21, 2025 12:17 AM
சென்னை:''தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட உள்ள, 2,642 டாக்டர்கள் நியமனத்தில் முறைகேடு நடக்கவில்லை. அதேநேரம், முறையாக பணி செய்யாத டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், 1,127 அரசு டாக்டர்களுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அதற்கான ஆணையை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:
மருத்துவப் பணியை பொறுத்தவரை, விரும்பி செய்தால் தான் வெற்றிக்கொடி நாட்ட முடியும். படிப்பை முடித்த பிறகு, பல கிலோ மீட்டர் தள்ளி பணி கிடைத்தால், முழு மனதோடு செய்ய முடியாது. கடந்த ஆண்டு காலியிடங்களை கண்டறிந்து நிரப்பினோம்.
அப்போது, பணிமாறுதல் கோரி பலர் என்னை தொந்தரவு செய்தனர். அனைவருக்கும் ஒன்றாக கொடுப்பேன் என்று தெரிவித்து, தற்போது பணிமாறுதல் ஆணைகளை வழங்கி உள்ளேன்.
இதில், 893 பேர் சொந்த ஊர் மற்றும் அருகாமை ஊர்களில் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வேன். அப்போது, பணி நேரத்தில் பணியில் இல்லாத டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
தற்போது நிரப்பப்பட உள்ள 2,642 டாக்டர் பணியிடங்களில் முறைகேடு நடக்கவில்லை. கடந்த ஜூலை 15க்கு பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கில் பதிவு செய்தவர்கள், பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
அறிவிப்பின்படி, அதற்கு முன் பதிவு செய்த, தகுதியான டாக்டர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
அவர்களுக்கும் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, வரும் 26ம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வர்ஷன் சென்டரில், முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதன்பின், அரசு மருத்துவமனைகளில், காலிப்பணியிடம் என்ற நிலையே இருக்காது.
நான்கு ஆண்டுகளில், 12,690 டாக்டர்கள் உட்பட, 40,490 பேருக்கு, வெளிப்படை தன்மையுடன் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, 11 வயது சிறுவன், சென்னை அழைத்து வரப்பட்டு, உயர் ரக சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார்.

