தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன
தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன
ADDED : பிப் 15, 2025 04:51 AM
மதுரை : தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகத்தில் அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளராக (மா.செ.,) அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கியுள்ளது. இதன் மூலம் மதுரையில் அமைச்சர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஓரங்கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போதுள்ள 72 மாவட்டங்களை 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் அடிப்படையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படும். இதன் மூலம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என சீனியர் நிர்வாகிகள் பலர் கனவில் இருந்தனர். ஆனால் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கி 4 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது மூன்று மாவட்ட செயலாளர்கள் தான் உள்ளனர். 2 தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டால் மேலும் 2 பேருக்கு மா.செ., பதவிகள், கிடைக்கும். மதுரை நகர் தி.மு.க.,வில் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என 4 சட்டசபை தொகுதிகள் நகர் செயலாளர் தளபதி வசம் இருந்தது. இதில் 2தொகுதிகளை பிரித்து புதிய மாவட்டம் கிடைக்கும் என அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான மூர்த்தியிடம் கிழக்கு, மேலுார், சோழவந்தான் என 3 சட்டசபை தொகுதிகள் இருந்த நிலையில், நகர்ப் பகுதியில் உள்ள மேற்கு தொகுதியும் அவரது கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. இதையடுத்து மாநிலத்தில் அதிக தொகுதிகளை கொண்ட மா.செ.,வாக மூர்த்தி உள்ளார்.
பின்னணி என்ன
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவது முதல்வர் ஸ்டாலினின் இலக்கு. அதற்கு ஏற்ப செயல்படும் முக்கிய அமைச்சர்கள், மா.செ.,க்களுக்கு கூடுதல் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்டத்தில் மேலுார் (பெரியபுள்ளான்), மதுரை மேற்கு (முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ) தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளது. இத்தொகுதிகளை 2026ல் தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என மூர்த்திக்கு 'டார்க்கெட்' வைக்கப்பட்டுள்ளது.
மதுரைநகர்ப் பகுதியில்உள்ள 3 தொகுதிகளும் தி.மு.க., வசமே உள்ளன. மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவுக்கு எதிராக மூர்த்தியால் தான் களமிறங்க முடியும் என தலைமை முடிவு செய்து அத்தொகுதியை அவருக்கு மாற்றியது. மொத்தத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது என்றனர்.