மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., மகள் பாக்டீரியா தொற்றால் உயிரிழப்பு
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., மகள் பாக்டீரியா தொற்றால் உயிரிழப்பு
ADDED : ஜூன் 05, 2025 12:30 AM

கோவை:மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி மகள் கருணாம்பிகா, அரிய வகை பாக்டீரியா தொற்றால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி - டாக்டர் சின்னுசாமி ஆகியோரின் மகள் கருணாம்பிகா, 54. இவரது கணவர் 'ஆற்றல்' அசோக்குமார், பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர். கடந்த லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
கருணாம்பிகா - அசோக்குமார் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கருணாம்பிகா, 'தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' குழுமத்தின் இணை நிறுவனர். இந்திய கட்டட கலை நிறுவன கோவை மைய துணை தலைவராக இருந்தார். அண்ணா பல்கலையில், கட்டட கலை மற்றும் திட்டமிடல் தொடர்பான கல்வியில், தங்கப்பதக்கம் வென்ற இவர், அமெரிக்காவின் பால் ஸ்டேட் பல்கலையில் கட்டட கலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன், இவருக்கு அரிய வகை பாக்டீரியா தொற்றால் உடல் நலம் பாதிக்கப் பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பல உறுப்புகள் செயல் இழந்ததோடு, 36 மணி நேரத்துக்குள் தொற்று வேகமாக பரவி, உயிரிழந்தார்.