தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு கொண்டவர் மோடி: வாசன்
தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு கொண்டவர் மோடி: வாசன்
ADDED : பிப் 27, 2024 11:22 PM
திருப்பூர்:''தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு கொண்டவர் பிரதமர் மோடி'' என்று த.மா.கா., தலைவர் வாசன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேசியதாவது:
த.மா.கா., தலைவர் வாசன்: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டுவது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் நோக்கம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அரசு, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த அரும்பாடுபடுகிறது. அண்ணாமலை யாத்திரையின் நோக்கம், 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு காரணம், அண்ணாமலை மற்றும் அவரது குழுவினரின் விடாமுயற்சியே.
அண்ணாமலையின் நடைபயணம், லோக்சபா தேர்தலுக்கு அச்சாரமாக அமைகிறது. காமராஜர், மூப்பனார் ஆசியுடன் பிரதமர் மோடி தலைமையில், 'வளமான தமிழகம், வலிமையான பாரதம்' ஏற்படுத்தக்கூடிய உன்னத நிலையை நாம் எட்டுவோம். பிரதமர் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீது அன்பு வைத்துள்ளார். நம் கலாசாரம் மீதும் அன்பு வைத்துள்ளார்.
தமிழருவி மணியன்: தமிழகத்தில் பா.ஜ., கட்சி இருக்கிறதா? தேர்தல் களத்தில் நின்றால், 'நோட்டா' அளவுக்கு கூட ஓட்டு வாங்குமா, கட்சி எங்கே இருக்கிறது என, பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நிலை மாறி, பா.ஜ., எங்கும் இருக்கிறது என்ற நிலை உருவாகி இருக்கிறது.

