பணம் இலக்கு அல்ல; கனவுக்காக ஓடுங்கள்: மத்திய பஞ்சாயத்து ராஜ் செயலர் அறிவுரை
பணம் இலக்கு அல்ல; கனவுக்காக ஓடுங்கள்: மத்திய பஞ்சாயத்து ராஜ் செயலர் அறிவுரை
ADDED : டிச 30, 2025 06:35 AM
சென்னை: ''பணம் நமது இலக்கு அல்ல; உழைப்பின் பக்க விளைவு தான் பணம். மாணவர்கள் தங்கள் கனவுகள் நிறைவேற உழைக்க வேண்டும்,'' என, மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சக செயலர் விவேக் பரத்வாஜ் தெரிவித்தார்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பட்டயக் கணக்காளராக தேர்ச்சி பெற்ற, 1,300 பேருக்கு பட்டமளிக்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், புதுடில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட, 15 மையங்களில், சி.ஏ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலர் விவேக் பரத்வாஜ், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பட்டங்களை வழங்கினார்.
பின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் பேசியதாவது:
பணம் அனைவருக்கும் தேவை. ஆனால், பணம் நமது இலக்கு அல்ல; உழைப்பின் பக்க விளைவு பணம். எலான் மஸ்க் பணத்திற்காக ஓடவில்லை, கனவிற்காக உழைத்தார். அதேபோல, மாணவர்கள் தங்கள் கனவு நிறைவேற உழைக்க வேண்டும்.
நாம் செய்யும் தொழிலில் ஆர்வம் இருந்தால், பணம் நம்மை வந்து சேரும். சி.ஏ., பட்டய கணக்காளரின் உயிர் நாடி நேர்மை.
உங்களது ஒரு கையொப்பம், ஒரு நிறுவனத்தின் எதிர்காலத்தை மாற்றும். எனவே, அதை உங்கள் குடும்ப கணக்கு போல நினைக்க வேண்டும்.
வெற்றி பெற்ற பின் சமூகத்திற்கு சிலவற்றை திருப்பி கொடுங்கள். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளதால், உங்கள் தொழில் நேர்மை, உழைப்பு, சிறந்த முடிவு ஆகியவற்றுடன், நாட்டையும் உயர்த்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

