திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 50க்கு மேலானோர் கைது
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 50க்கு மேலானோர் கைது
ADDED : பிப் 03, 2025 06:23 PM

திண்டுக்கல்: திருப்பரங்குன்றத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முயற்சி செய்த ஹிந்து அமைப்பினர் 50க்கு மேலானவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பினர் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதை சமாளிக்கும் நோக்கத்துடன், மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பா.ஜ.,சிவசேனா, ஹிந்து முன்னணி, உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் இப்போராட்டத்தில்
பங்கேற்கும் எண்ணத்தில் நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்தனர்.
இதையறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதுமான திண்டுக்கல் நகர், புறநகர், சின்னாளப்பட்டி, வத்தலக்குண்டு, பழநி, நத்தம், சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்உள்ள போராட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கும் நிர்வாகிகள் 50க்கு மேலானவர்களை மட்டும் குறிவைத்து களம் இறங்கினர்.
நேற்று காலை முதல் வீட்டுசிறை, மண்டபத்தில் அடைத்து வைப்பது, போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் நேற்று காலை முதல் பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். ஒவ்வொரு நிர்வாகிகள் வீடுகள் உள்ள பகுதிகளிலும் போலீசார் காலை முதல் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

