நகராட்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2026 06:30 AM

சென்னை: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில், நேற்று 22ம் நாளாக, கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு, நான்காம் நிலைப் பணியாளர்களுக்கு இணையாக, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், தமிழகம் முழுதும், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை எழிலகம் வளாகத்தில், 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் உள்ள, கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி பணியாளர்கள்
சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள, நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
கூட்டமைப்பினர் கூறுகையில்,'நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பு செய்து, கருவூலம் வாயிலாக, ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் எல்லை விரிவாக்க பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின் ஊழியர்கள்
அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்குவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, மின் வாரிய பணியாளர்கள், சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வாயிலில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தமிழக மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது: இரண்டாவது நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகள், பொறியாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடையாது என, ஊதிய உயர்வு கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், திருத்தி அமைக்கப்பட்ட கருத்துரு வெளியிட வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரேஷன் ஊழியர்கள்
தமிழக கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
'பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதை உடனே அமல்படுத்த வேண்டும்.
ரேஷன் ஊழியர்களின் ஊதிய உயர்வை தாமதமின்றி அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தற்போது, கூட்டுறவு துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 6ம் தேதி, சென்னை கீழ்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், முற்றுகை போரட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
யோகா ஆசிரியர்கள்
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், மாநில அரசு இரண்டு ஆண்டுகளாக ஊதியம் வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே, தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசை கண்டித்து, யோகா பயிற்சிகள் செய்து, நுாதன முறையில் போராடினர்.

