கமிஷனர் வீடுகளில் நகராட்சி பணியாளர்கள்; திருப்பி அனுப்ப இயக்குனர் அதிரடி உத்தரவு
கமிஷனர் வீடுகளில் நகராட்சி பணியாளர்கள்; திருப்பி அனுப்ப இயக்குனர் அதிரடி உத்தரவு
ADDED : நவ 11, 2024 06:25 AM
சென்னை ; நகராட்சி கமிஷனர் வீடுகளில் பணி அமர்த்தப்பட்டு உள்ள துறை பணியாளர்களை, நகராட்சிக்கு திரும்ப அனுப்ப, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 138 நகராட்சிகள் உள்ளன. நகராட்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, கமிஷனர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு செயல் வடிவம் தருதல் உள்ளிட்ட பணிகளை, கமிஷனர்கள் செய்து வருகின்றனர்.
பல கமிஷனர்கள், தங்கள் வீடுகளில் நகராட்சி பணியாளர்களை, சமையல், துப்புரவு, வீட்டு விலங்குகள் பராமரிப்பு, வீட்டில் உள்ள முதியோர், குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதனால், நகராட்சி பணியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பெண் பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது.
நகராட்சி பணியாளர்கள், கமிஷனர் வீடுகளில் வீட்டு வேலை பார்ப்பது குறித்த தகவல், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு கவனத்திற்கு சென்றது. அதைத்தொடர்ந்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
நகராட்சி கமிஷனர்கள், தங்கள் குடியிருப்புகளில், நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை, வீட்டு வேலைக்கு பணி அமர்த்துவதாக தெரிய வருகிறது. அவ்வாறு பணி அமர்த்தக் கூடாது.
இனி வரும் காலங்களில், இதுபோன்ற புகார்கள் வரும் போது, சம்மந்தப்பட்ட நகராட்சி கமிஷனர்கள் மீது, உரிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகல், அனைத்து நகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோல, நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர் வீடுகளில் பணிபுரியும், நகராட்சி பணியாளர்களையும் திரும்பப் பெற நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.