UPDATED : அக் 28, 2026 06:02 PM
ADDED : அக் 28, 2026 05:59 PM
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள், தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பொதுச்செயலர் தாமோதரன் வெளியிட்ட அறிக்கை:
நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், பணி நிரந்தம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் பயன், பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை, பல ஆண்டுகளாக முன்வைக்கிறோம்.
இதுதொடர்பாக, நான்கு கட்ட போராட்டங்கள் நடத்தி, துறையின் செயலரிடம் பேச்சு நடத்தியும் பயனில்லை.
அதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். அதன்படி, நவம்பர் 11ல், கோரிக்கை அட்டை இயக்கம், நவம்பர் 25ல், அனைத்து நகராட்சி, மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தொடர்ந்து, டிசம்பர் 4ல், தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று முறையீடு செய்ய உள்ளோம். டிசம்பர் 23ல், பேரணியாகச் சென்று, நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் முறையிட இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
