ADDED : நவ 06, 2026 08:21 PM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி இறந்து கிடந்த நிலையில், கொலையா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கச்சுவாடியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலாஜி, 22. இன்று (நவ.,6) அதிகாலை, கச்சுவாடியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாலாஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். அவரது வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்ததாகவும், காயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் காளிபாய், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சந்தேக மரணம் என, போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணையில், நேற்று (நவ.,5) இரவு, பாலாஜியுடன் சேர்ந்து சில நண்பர்கள் அங்கு கேம் விளையாடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாலாஜி அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
