ADDED : மார் 14, 2024 11:58 PM

சிலைமான் : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா 50. பார்வையிழந்தவர். கணவர் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் டேனியல் ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சிலைமான் அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் கவிதா தனியாக வசித்தார். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் கை, கால் கட்டப்பட்டு கவிதா இறந்து கிடந்தார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரித்தனர். கவிதா வீடு அருகே வசிக்கும் கலையரசியின் 30, அலைபேசியை ஆய்வு செய்தபோது அவருக்கு பழக்கமான எல்.கே.பி.நகர் சிவானந்தத்துடன் 21, இணைந்து நகைக்காக கவிதாவை கொலை செய்தது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது: கணவர் இறந்த நிலையில் கலையரசிக்கும் சிவானந்தத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கலையரசிக்கு கடன் இருந்ததால் கவிதா நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டார். கவிதா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருவதற்குள் இருவரும் வீட்டினுள் நுழைந்து காத்திருந்தனர்.
கவிதா வீட்டுக்குள் வந்தவுடன் வாயில் துணியை திணித்து நகையை பறித்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்டு மயங்கியதால் கை, கால்களை கட்டிப்போட்டு நகையை பறித்துள்ளனர். இதில் கவிதா இறந்தார். வெளியூர் தப்பிய இருவரையும் கைது செய்தோம் என்றனர். இரண்டே நாட்களில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை டி.ஐ.ஜி., ரம்யாபாரதி, எஸ்.பி., அர்விந்த் பாராட்டினர்.

