வீட்டில் மது விருந்து அளித்த எலக்ட்ரீஷியன் கொலை: 3 நண்பர்களை தேடும் போலீஸ்
வீட்டில் மது விருந்து அளித்த எலக்ட்ரீஷியன் கொலை: 3 நண்பர்களை தேடும் போலீஸ்
ADDED : ஜூலை 22, 2024 05:54 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமராவதியில் மது விருந்து அளித்த வாலிபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது 3 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அமராவதியைச் சேர்ந்த மகேஷ் 38, வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை செய்தார். 2019 ல் இவருக்கு திருமணம் நடந்தது. பின் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றார். பின் விமான பயணத்தில் பழக்கமான ஷோபி, 36, என்பவரை ஐந்து மாதங்களுக்கு முன் மகேஷ் திருமணம் செய்தார். ஷோபி, மஸ்கட்டில் அழகு கலைஞராக வேலை செய்கிறார். இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும். இந்நிலையில் இருவரும் ஊர் திரும்பிய நிலையில் ஷோபி, சென்னையிலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இதனால் நண்பர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து மாடியில் மகேஷ் மது விருந்து நடத்தியுள்ளார். மகேஷின் அக்காள் மகள் அலைபேசியில் அவரை அழைத்தபோது எடுக்காததால், வீட்டுக்கு சென்ற போது அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'மல்லன்விளை மெக்கானிக் பெனிட், 27, பொற்றைகாட்டுவிளை பெயின்டர் திரேன்ஸ், 23, மல்லன்விளை பிபின் ஜேக்கப், 23, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்தால் கொலைக்கான காரணம் தெரியவரும்' என்றனர்.

