பழனியில் முருகன் மாநாட்டை ஸ்டாலின்... துவக்கினார்! அறத்தால் உலகம் நன்றாகும் என உருக்கம்
பழனியில் முருகன் மாநாட்டை ஸ்டாலின்... துவக்கினார்! அறத்தால் உலகம் நன்றாகும் என உருக்கம்
ADDED : ஆக 24, 2024 08:44 PM

சென்னை:அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பழனியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டை, சென்னையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அவர் துவக்கினார் .
அப்போது, முதல்வர் பேசியதாவது:
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது. கருணாநிதி ஆட்சியில் நடந்த மக்கள் பணிகளை, குன்றக்குடி அடிகளாரும், கிருபானந்த வாரியாரும் பாராட்டினர். இன்றைய ஆட்சியை, நீங்கள் எல்லாரும் பாராட்டுகிறீர்கள்.
கும்பாபிஷேகம்
பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது. பழனி, திருத்தணி, திருச்செந்துார், மருதமலை, குமாரவயலுார், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் கோவில்களில் பெருந்திட்டப் பணிகள் நடக்கின்றன.
அறுபடை வீடு முருகன் கோவில்களில், 790 கோடி ரூபாய் மதிப்பில் 251 பணிகள் நடந்து வருகின்றன. அறுபடை வீடு இல்லாத முருகன் கோவில்களில், 277 கோடி ரூபாய் மதிப்பில், 588 பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 69 முருகன் கோவில்களில் திருப்பணி முடிந்து,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதில் உயர்வு, தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு, என் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.
நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தான், பழுத்த ஆத்திகரான அன்றைய முதல்வர் பனகல் அரசரால், ஹிந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பன்னாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
முறையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோவில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம் தான்.
அளவிடும் பணி
கடந்த மூன்று ஆண்டு களில், 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம்; 3,776 கோடி ரூபாயில் 8,436 கோவில்களில் திருப்பணிகள்; 50 கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிதிராவிடர் கோவில்களில் திருப்பணி; 62.76 கோடி ரூபாயில், 27 கோவில்களில் ராஜகோபுர பணிகள் நடந்துள்ளன.
கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 1.59 லட்சம் ஏக்கர் நிலங்கள், நவீன 'ரோவர்' கருவிகள் வழியாக அளவீடு செய்யப்பட்டு, 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன.
சமத்துவம்
இச்சாதனைகளுக்கு மகுடம் வைத்தது போல, பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது.
இது, ஹிந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக ஆன்மிக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தை பெறும்.
கோவில் வழிபாடுகளில், தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் ஒன்றாகும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

