ADDED : ஆக 03, 2025 02:52 AM
திருச்சி: 'காமராஜரை இழிவுபடுத்திய தி.மு.க.,வை, ஆட்சியில் இருந்து வீழ்த்துவோம்' என, நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.
காமராஜரை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சிவா எம்.பி.,யை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து நாடார் சங்கங்கள், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கம் ஆகியவை இணைந்து திருச்சியில், உண்ணாவிரத போராட்டம் நடத்தின.
இதில், தமிழகம் முழுதும் இருந்து நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் கூறியதாவது:
காமராஜருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அவதுாறான, பொய்யான கட்டுக்கதைகளை பேசிய தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், எம்.பி.,யுமான சிவா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தி.மு.க.,வைச் சேர்ந்த துரைமுருகன், ராஜா, ராஜிவ்காந்தி போன்றோர் காமராஜரை அவமதிக்கும் வகையில், தொடர்ந்து பேசுகின்றனர்.
ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பதில், ஸ்டாலின் உட்பட அனைவருமே வெவ்வேறு கருத்துகளை கூறி சமாளிப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டர். ஆர்.எஸ்.பாரதி மட்டும் ஒருமுறை தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
சிவாவை ராஜ்யசபா எம்.பி., பதவியில் இருந்தும், கட்சிப் பதவியில் இருந்தும் தி.மு.க., தலைமை நீக்காததால், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் ஓட்டு கேட்க வரக்கூடாது' என, வீடுதோறும் ஸ்டிக்கர் ஒட்டுவோம். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.