குலசை தசராவுக்கு அடிப்படை வசதி முதல்வரிடம் நாடார் சங்கம் மனு
குலசை தசராவுக்கு அடிப்படை வசதி முதல்வரிடம் நாடார் சங்கம் மனு
ADDED : செப் 28, 2024 10:11 PM
சென்னை:குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு, போதிய அடிப்படை வசதிகளை செய்யவும், பஸ் மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தவும் கோரி, தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் முதல்வர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா, வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 13ம் தேதி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வருவர்.
பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். சென்னை மற்றும் கோவையில் இருந்து திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, காளி, சிவன், பெருமாள், விநாயகர், முருகன், சுடலைமாடன் எனப் பல்வேறு வேடங்கள் தரித்து வருவர்.
பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. ஆனால், கோவில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை.
இதனால், பெண்கள், குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்காலிக பஸ் நிலையங்களில், நிழற்குடை எதுவும் அமைக்கப்படாததால், முதியோர், பெண்கள் வெயிலில் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த ஆண்டு தற்காலிக நிழற்குடைகள் அமைக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில், போதிய கழிப்பறை, குளியல் அறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.