ADDED : ஜன 27, 2025 03:32 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அ.தி.மு.க.,வினர் நடத்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கூட்டத்தில், பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
திருநெல்வேலி ஜங்ஷன் ராஜ் மகாலில், எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அகில உலக எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் சைதை துரைசாமி பங்கேற்றார். இதில், பா.ஜ., சட்டசபை குழு தலைவரான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அ.தி.மு.க., நிர்வாகிகள் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரு நாட்களுக்கு முன் நயினார் நாகேந்திரன், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் பா.ஜ., பேசினாலே போதும்; பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி மலர்ந்து விடும்' என, பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், அவர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்றதும், அ.தி.மு.க., முன்னணி தலைவர்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும் கூட்டணிக்கு அச்சாரமா என, இரு கட்சியினரை பேச வைத்துள்ளது.
நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''மறைந்து 37 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களின் நிற்பவர் எம்.ஜி.ஆர்., அந்த வகையில் கூட்டத்தில் பங்கேற்றேன்,'' என்றார்.

