செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்
செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்
UPDATED : செப் 05, 2025 06:47 PM
ADDED : செப் 05, 2025 11:24 AM

நெல்லை: எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் தான். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
நெல்லையில் அவர் அளித்த பேட்டி;
இபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் என் பார்வை என்பது எதுவும் கிடையாது. அதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். செங்கோட்டையன் பேச்சு அதிமுக உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை.
பாஜ என்பது யாருக்கும் உரிமையான கட்சி கிடையாது. பாஜ ஒரு தேசிய கட்சி. 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 1300க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ள கட்சி.
இன்றைக்கு நான் 3 ஆண்டுகள் தலைவராக உள்ளேன். கட்சி மேலிடம் தொடர்ந்து அனுமதித்தால் தான் நான் இந்த பதவியில் தொடர முடியும். ஆனால் திமுக அப்படி இல்லை. அது ஒரு குடும்ப கட்சி. அதில் தான் வாரிசு இருக்கக்கூடாது.
தேர்தல் என்பது வேறு. அரசியல் கூட்டணிக் கட்சிகள் இன்னும் 7 மாதம் உள்ளது.பல்வேறு நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும். காலங்கள் உள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.பாஜவில் எந்த கோஷ்டிபூசலும் இல்லை.
எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் ஒரு தீர்மானம் பண்ணி விட்டார்கள் என்றால் அதில் மாறமாட்டார்கள். இன்றைக்கு ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி.
கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் அறிக்கை விடும் முன்பே நான் அவரிடம் பேசி இருக்கிறேன். அதேபோல டிடிவி தினகரனிடமும் நான் பேசி இருக்கிறேன். எல்லாம் காலம் வரும்போது சரியாகிவிடும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.