நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.,வில் மாநில பதவி
நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.,வில் மாநில பதவி
ADDED : செப் 05, 2025 07:16 AM

சென்னை: தமிழக பா.ஜ.,வில் வழக்கறிஞர், மருத்துவம் உட்பட 25 பிரிவுகளுக்கு, மாநில அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக, ஸ்ரீ நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார் இவர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன்.
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. இதில், விவசாய அணி, மகளிர் அணி உட்பட ஐந்து அணிகள் உள்ளன. இது தவிர, வழக்கறிஞர், கலை மற்றும் கலாசாரம் உட்பட, 25 பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில், மாநிலம் முழுதும் கிளை, மண்டல அளவில் தேர்தல் நடத்தி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த ஆண்டு துவக்கத்தில், மாவட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர், மாநில நிர்வாகிகள், அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று, 25 பிரிவுகளுக்கும், மாநில அமைப்பாளர்களை, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நியமித்துள்ளார். அதன்படி, வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில் துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவ பிரிவுக்கு பிரேம்குமார் உள்ளிட்ட, 25 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர்களாக, நயினார் பாலாஜி, ஆர்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர, பூத் கமிட்டி, பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட, 19 பணிகளை ஒருங்கிணைக்க மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.