ADDED : ஆக 25, 2025 01:12 AM
பதிவுத்துறையில் பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண, குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், வரும், 28ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி, பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கு பதிவுத்துறை சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பதிவுத்துறை எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, அந்தச் சங்கத்தின் நிர்வாகிகள், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளித்தனர். அதனால், புகாருக்கு விளக்கம் கேட்டு, பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு, ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், 'எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் சங்கத்தின் புகார் தொடர்பாக, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் நோட்டீசுக்கு பதில் வராத நிலையில், சிவில் நீதிமன்ற அதிகாரத்தின் அடிப்படையில், ஐ.ஜி.,க்கு சம்மன் அனுப்ப ஆணையம் நடவடிக்கை எடுக்கும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

