நாடு முழுதும் மதுவிலக்கு கொள்கை: தீர்மானம் வி.சி.க., மகளிர் மாநாட்டில் தீர்மானம்
நாடு முழுதும் மதுவிலக்கு கொள்கை: தீர்மானம் வி.சி.க., மகளிர் மாநாட்டில் தீர்மானம்
ADDED : அக் 03, 2024 12:31 AM
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 47ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசிய கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்ற வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதோடு, கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைபடுத்துவதற்கு ஏற்ப, மதுபான கடைகளை மூடுவதற்கு உரிய கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
குடி நோயாளிகளுக்கும், போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக மையங்களை ஏற்படுத்த வேண்டும். மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை, அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் எனும் அரசு நிறுவனத்தின் மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும். மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மதுவிலக்கு பிரசார இயக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

