அதிகாரிகள் அலட்சியம்; சுற்றுலா செல்ல விரும்புவோர் அதிருப்தி
அதிகாரிகள் அலட்சியம்; சுற்றுலா செல்ல விரும்புவோர் அதிருப்தி
ADDED : ஜன 01, 2025 04:38 AM
சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடுகளால், சுற்றுலா செல்ல விரும்புவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஒரு நாள் திருப்பதி சுற்றுலா, மூன்று நாள் நவராத்திரி சுற்றுலா, ஆறு நாட்கள் தென்தமிழக சுற்றுலா உட்பட, 30 வகையான வாராந்திர சுற்றுலா திட்டங்களும், 17 பருவகால சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
அதேநேரத்தில், திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கென, சுற்றுலா துறை சார்பில் பிரத்யேக மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.அவற்றில் தொடர்பு கொண்டால், உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது மக்கள் சிலர் கூறியதாவது:
குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்து, திட்டம் தொடர்பான தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொண்டோம்.
'பேக்கேஜ்' குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டோம். ஆனால், அதிகாரிகள் அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்ட போதும், அழைப்பு ஏற்கப்படவில்லை.
துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதும், அவர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்தனர். சென்னையில் வசிப்பவர்களால், துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல முடியும். வெளிமாவட்டங்களில் வசிப்பவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதனால், சுற்றுலா செல்ல விரும்புவோர் கூட, மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து விசாரிக்க, சுற்றுலாத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

