நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோர் வேண்டுதல்
நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோர் வேண்டுதல்
ADDED : நவ 29, 2025 12:44 AM

பெரியகுளம்: நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த தேனி மாவட்டம், லட்சுமிபுரம் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்க வேண்டி அங்குள்ள காளியம்மன் கோயிலில் வழிபாடு செய்து அமைதி போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களை தலைமியிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. பணத்திற்கு மாத வட்டி வழங்கி, குறிப்பிட்ட ஆண்டில் முதிர்வு தொகை, வட்டியுடன் அசல் வழங்கப்படும் என்றனர்.
இதனை பொதுமக்கள் பலரும் நம்பி முதலீடு செய்தனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், லட்சுமிபுரம் உட்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 கோடி வரை முதலீடு செய்தனர். தேனி மாவட்டத்தில் ரூ.500 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக லட்சுமிபுரம் பகுதி மக்கள் ரூ.200 கோடிக்கும் மேல் நியோமேக்ஸில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும், அசலும் வரவில்லை என பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீதிமன்றத்தில்வழக்கு நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று பணம் திரும்ப கிடைக்க வேண்டி, லட்சுமிபுரம் காளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர் தொடர்ந்து காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அமைதி போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், 'கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளோம். எங்கள் பிரச்னையை காளியம்மன், கருப்பணசாமியிடம் மனமுருகி வேண்டியுள்ளோம். நல்லது நடக்கும் என நம்புகிறோம்,' என்றனர்.

