வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
ADDED : செப் 21, 2024 01:08 AM
சென்னை:'வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால், வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்' என, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், இன்று வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் தாக்கத்தால், வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில், நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகத்தின் வடமாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் சில நாட்களாக வாட்டி எடுத்த வெயில், அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக குறையும்.
மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது, வரும் 26 வரை நீடிக்கும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.