வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: 6 மாவட்டங்களில் இன்று கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: 6 மாவட்டங்களில் இன்று கனமழை
ADDED : அக் 24, 2025 06:42 AM

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தர்மபுரி மாவட்டம் அரூரில் 11; நாமக்கல் மாவட்டம் மோகனுார், நாமக்கல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதிகளில் தலா, 9; திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டை, நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் பகுதிகளில் தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது; இது, தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும்; இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும்.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து, அக்., 26ம் தேதிக்கு பின், மீண்டும் கனமழை துவங்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்ததால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கிழக்கு கடலோர பகுதிகளில் வரும் நாட்களில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது' என பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

