மினி பஸ்களுக்கான புதிய திட்டம் அறிவிப்பு சென்னையில் தனியாருக்கு அரசு அனுமதி
மினி பஸ்களுக்கான புதிய திட்டம் அறிவிப்பு சென்னையில் தனியாருக்கு அரசு அனுமதி
ADDED : ஜன 29, 2025 01:03 AM
சென்னை:தமிழகத்தில் மினி பஸ்களுக்கான புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. மினி பஸ்கள் கட்டணமும் மாற்றப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் முதல்முறையாக மினி பஸ்கள் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில், 2,950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள நிலவரப்படி, 20 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். அதில், 4 கி.மீ., ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். மீதமுள்ள, 16 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
இதற்கிடையே, புதிய மினி பஸ் வரைவு திட்டம் குறித்து, தமிழக அரசிதழில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம், கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி சென்னையில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக, மினி பஸ்களுக்கு அனுமதிக்கப்படும் துாரத்தை குறைக்க வேண்டும் என்றும், பலரும் வலியுறுத்தினர். அதன் அடிப்படையிலான வரைவு திட்டத்தை, உள்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆணையரகம் தயாரித்து அரசிடம் அளித்தது.
அதை ஏற்று, மினி பஸ்களுக்கான புதிய திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், ஏற்கனவே கூறப்பட்ட வரைவுகளை பின்பற்றி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
↓புதிய திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். இதில், 16.25 கி.மீ., புதிய வழித்தடத்திலும், மீதமுள்ள 8.75 கி.மீ., துாரம், ஏற்கனவே பஸ்கள் செல்லும் வழித்தடங்களிலும் இயக்கலாம்
↓மினி பஸ்கள் சென்றடையும் இடத்தில் இருந்து, அடுத்த ௧ கி.மீ., துாரத்திற்குள் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, கோவில், சந்தைகள் இருந்தால், அதுவரை மினி பஸ்கள் இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்
↓சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் மினி பஸ்களை இயக்கலாம்
↓ஏற்கனவே உள்ள மினி பஸ் உரிமையாளர்கள், தங்களது உரிமங்களை, 'சரண்டர்' செய்து விட்டு, புதிய, 'பர்மிட்' பெறலாம்
↓பஸ் நிலையங்களில் மினி பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி, அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்படும்
↓மினி பஸ்களுக்கான வழித்தடங்களை, மாவட்ட கலெக்டர்கள் அல்லது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இறுதி செய்வர். பின்னர், அந்த வழித்தடங்களில் தேவையான அளவுக்கு மினி பஸ்கள் இயக்கலாம்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, சென்னை மற்றும் மாவட்ட பகுதிகளில், கூடுதல் மினி பஸ்கள் வசதியை பெற முடியும். அதுபோல், 0 - 2 கி.மீ., 2 ரூபாய், 2 - 4 கி.மீ., 4 ரூபாய், 4 - 6 கி.மீ, 5 ரூபாய், 6 - 8 கி.மீ., 6 ரூபாய், 8 - 10 கி.மீ., 7 ரூபாய், 10 - 12 கி.மீ., 8 ரூபாய், 12 - 18 கி.மீ., வரை 9 ரூபாய், 18 - 20 கி.மீ., 10 ரூபாய் என, புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இந்த புதிய கட்டணங்கள், வரும் மே 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.