நிலம் கொடுத்தால் மனை கிடைக்கும்: புதிய திட்டம் அறிமுகம்
நிலம் கொடுத்தால் மனை கிடைக்கும்: புதிய திட்டம் அறிமுகம்
ADDED : ஏப் 28, 2025 04:45 AM

சென்னை : வளர்ச்சி திட்டங்களுக்காக, பொதுமக்களிடம் இருந்து காலி நிலத்தை பெற்று, மேம்படுத்தப்பட்ட மனைகளாக வழங்கும், புதிய வழிமுறையை செயல்படுத்துவதில், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக மக்கள் அதிகம் குடியேறிய பகுதிகளில், சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு தேவையான நிலம் கிடைப்பதில்லை. இத்திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த, அதிக செலவாவதுடன், வழக்கு தொடர்பான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது.
பேருதவி
இந்நிலையில், புதிதாக வளரும் நகர்ப்புற பகுதிகளில், காலி நிலங்களை மக்களிடம் இருந்து மொத்தமாக பெற்று, அதை திட்டமிட்ட நகர்ப்புற பகுதியாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் காலி நிலங்களுக்கு பதிலாக, மேம்படுத்தப்பட்ட மனைகள், நிலம் கொடுத்தோருக்கு வழங்கப்படும்.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், இத்திட்டம், 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. புறநகர் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சியை திட்டமிட, இந்த வழிமுறை பேருதவியாக அமைந்துஉள்ளது.
எனவே, தமிழகத்தில் புதிதாக வளரும் புறநகர் பகுதிகளில், இந்த வழிமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான அனுமதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இந்த வழிமுறையை பின்பற்ற துவங்கியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யும், இந்த வழிமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை டி.டி.சி.பி., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து நகர், ஊரமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற பகுதிகளில், நிலம் தனித்தனியாக பிரிவதால் வளர்ச்சிப்பணிகள் தடைபடுகின்றன. குறிப்பிட்ட பரப்பளவுக்கு, நிலங்களை ஒருங்கிணைத்து, சாலைகள், பூங்காக்கள், பொது பயன்பாட்டு இடங்களை ஏற்படுத்துவதால், நகர்ப்புற வளர்ச்சி சீராகிறது.
நிலத்தொகுப்பு முறையில் காலி நிலங்களை பெற்று, அதை மேம்படுத்தப்பட்ட மனைகளாக வழங்கும் திட்டம், சோதனை அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரங்களில் துவக்கப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இடம் தேர்வு தொடர்பான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓசூரில் இதற்கு கலந்தாலோசகர் தேர்வு பணி நடந்து வருகிறது.
நடவடிக்கை
இப்பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தாமல், அதை மேம்படுத்துவதற்கான அனுமதி மட்டும், உரிமையாளர்களிடம் பெறப்படும். மேம்படுத்தும் பணிகள் முடிந்த பின், நில பகிர்வு மேற்கொள்ளப்படும்.
சாலை, பூங்கா போன்றவற்றுக்கு, ஒவ்வொரு உரிமையாளரும் கொடுக்க வேண்டிய அளவுக்கான நிலத்தை, மொத்தமாக முன்கூட்டியே பெறுவது தான், இதன் அடிப்படை நோக்கம். இதை தொடர்ந்து பிற நகரங்களிலும், இதே வழிமுறையில் நிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

