நீர்வளத்துறையுடன் மோதல் பொதுப்பணி துறையில் புதிய சங்கம்
நீர்வளத்துறையுடன் மோதல் பொதுப்பணி துறையில் புதிய சங்கம்
ADDED : நவ 10, 2024 01:03 AM

சென்னை: நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பொதுப்பணி துறையில் புதிதாக பொறியாளர்கள் சங்கம் உருவாகி உள்ளது.
பொதுப்பணி துறையுடன் இயங்கி வந்த நீர்வளத்துறை, 2021ல், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தனியாக பிரிக்கப்பட்டது. இத்துறைக்கு அமைச்சர், செயலர் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்புகள் தனியாக உருவாக்கப்பட்டு உள்ளன.
மாநிலம் முழுதும், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறைக்கு சொந்தமாக 12,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில், 2,600 பெரிய கட்டடங்கள், நீர்வளத்துறையிடம் உள்ளன.
இந்த கட்டடங்களை பராமரிப்பதற்கான நிதி, பொதுப்பணி துறையிடம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது. துறை தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டட பராமரிப்பை சொந்தமாக மேற்கொள்ள, நீர்வளத்துறையினர் விரும்புகின்றனர். ஆனால், அரசு அதற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது. துறைகள் பிரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும், எந்தெந்த கட்டடங்கள் யாருக்கு சொந்தம் என்பதை, அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு என, ஒருங்கிணைந்த பொறியாளர் சங்கம், உதவி பொறியாளர் சங்கம் இயங்கி வந்தது. இப்போது, பொதுப்பணி துறை பொறியாளர்களுக்கு புதிய சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 'தமிழக பொதுப்பணி துறை பொறியாளர் சங்கம்' என பெயரிடப்பட்டு, அக்டோபர் 29ல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சங்கத்தின் மாநில தலைவராக, சென்னை மண்டல பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன், செயலராக, தென்மாநகர கோட்ட செயற்பொறியாளர் இமானுவேல் ஜெயகர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, இச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 1895 முதல், பொதுப்பணி துறை இயங்கி வருகிறது. நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு சூழ்நிலை காரணமாக, 2021 நவம்பர் மாதம் நீர்வளத்துறை தனியாக பிரிந்தது.பொதுப்பணி துறையில் பணியாற்றி வரும் பொறியாளர்களின் பணிச்சூழல் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில், புதிய சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.
தலைவர், இரண்டு துணை தலைவர், செயலர், ஐந்து இணை செயலர், பொருளாளர், 15 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சங்கம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில், www.tnpwdea.org என்ற இணையதளத்தை, எங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.