ADDED : நவ 27, 2025 02:13 AM
சென்னை: 'ஆராய்ச்சி மாணவ - மாணவியர், மத்திய புள்ளியியல் துறையின் புதிய இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்' என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை, நலத்திட்ட உதவிகளுக்காக அனைத்து வகையான புள்ளி விபரங்களையும் சேகரித்து வருகிறது. இந்நிலையில், இத்துறை சார்பில், புதிதாக 'பீட்டா வெர்ஷன்' புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மேம்பட்ட தேடல் கருவிகள், பல மொழி ஆதரவு கொண்ட ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, 'சாட்பாட்' ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. https://mospi.gov.in என்ற புதிய இணையதளத்தை, கல்லுாரி மாணவ - மாணவியர், ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பயன்படுத்த, உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.
இது, மாணவ - மாணவியருக்கு தேவையான, சமூக, பொருளாதார புள்ளியியல் தகவல்களை துல்லியமாக வழங்கும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

