ADDED : நவ 22, 2024 11:57 PM
சென்னை, கோவை, தஞ்சை, வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சியில், 'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' பெயரில் நாட்டுப்புற கலை விழாக்களை, தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை நடத்த உள்ளது. இதன் வாயிலாக, 4,500க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பயன்பெறுவர்.
சென்னையில் பொங்கல் பண்டிகையின் போது, சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, மற்ற இடங்களில் நடத்தப்படும். இதில், பங்கேற்க விரும்பும் கலை குழுக்கள், தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தும், ஐந்து நிமிட வீடியோவை, 'சிடி' அல்லது, 'பென்டிரைவில்' பதிவு செய்து, அத்துடன் 'www.artandculture.tn.gov.in' இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, தொடர்புடைய மண்டல கலை பண்பாட்டு அலுவலகங்களுக்கு, பதிவு தபாலில், டிச., 10க்குள் அனுப்ப வேண்டும்.
ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த மாதம் 9ம் தேதி, இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைத்தது. அவர்களை விடுதலை செய்யக்கோரி, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஐந்து பேரும் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர்.