ADDED : செப் 19, 2024 11:00 PM
பாஸ்போர்ட் சேவைக்கான, www.passportindia.gov.in என்ற இணையதளத்தின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இன்று இரவு 8:00 மணி முதல், 23ம் தேதி காலை 6:00 மணி வரை இணையதளம் இயங்காது.
இந்த தேதிகளில் சேவைக்கான முன்பதிவு செய்தோர், மாற்றப்பட்ட முன்பதிவு விபரங்களை, இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தபின், அதன் வாயிலாக அறியலாம் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, டிச., 1ல், இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்க உள்ளன. தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் நடக்கும் இந்த தேர்வுக்கு, அக்., 16 வரை, https://ctet.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மின்வாரியத்தின், துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் அலகில், ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பணிகள் முடித்து அடுத்த மாதம், 19ம் தேதி மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், நாமக்கல், அரியலுார், கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்ட பதிவாளர்கள்; கிருஷ்ணகிரி, திண்டிவனம், கன்னியாகுமரி, பெரியகுளம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த, 25 உதவியாளர்களும் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாகக் காரணங்களுக்காக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.