ADDED : செப் 17, 2025 12:58 AM
நாகர்கோவில்,:தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக, நாகர்கோவில் அருகே, ரஷீத் அகமது என்பவரின் வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சமீபத்தில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர்களை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களின் மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சமூக வலைதளங்களில், அவர்களை பின் தொடரும் நபர்கள் குறித்தும் விசாரித்தனர்.
அப்போது, ஆந்திராவில் கைதான நபர் ஒருவருடன், நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் மொபைல் போனில் பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திரா, டில்லி மற்றும் சென் னையை சேர்ந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆறு பேர், நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு சென்றனர். அங்கு, வட்ட விளையை சேர்ந்த ரஷீத் அகமது, 62, என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, அவரது மகன் ஹிஷாம் குறித்து விசாரித்தனர். அவர், பணி நிமித்தமாக சென்னை சென்று இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் இருந்த ஹிஷாமை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
சற்று மன வளர்ச்சி குன்றியவர் போல் காணப்படும் அவர், சிவில் இன்ஜினியரிங் படித்து இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர் ஒருவரின் சிம்கார்டை பயன்படுத்தியதும். அந்த எண் தான், ஆந்திர மாநிலத்தில் கைதான நபர் ஒருவரிடம் இருந்துள்ளது.
இதனால், ஹிஷாமும் ஆந்திராவில் கைதான நபரின் கூட்டாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. பின், அவர் விடுவிக்கப்பட்டார்.