பயங்கரவாத செயலுக்கு திருச்சியில் ரகசிய கூட்டம் என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்
பயங்கரவாத செயலுக்கு திருச்சியில் ரகசிய கூட்டம் என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்
ADDED : பிப் 06, 2025 02:01 AM

சென்னை:மன்னார்குடியில் கைதான பாவா பக்ருதீன், திருச்சியை மையமாக வைத்து பயங்கரவாத செயலுக்கு ரகசிய கூட்டம் நடத்தியது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த பாவா பக்ருதீன், 44, கபீர் அகமது அலியார், 48, ஆகியோர், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்துள்ளனர். இவர்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கைது செய்துள்ளனர்.
இவர்களில், பாவா பக்ருதீன், தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது போல, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு, முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பாவா பக்ருதீன், கபீர் அகமது அலியார் ஆகியோர், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக, ரகசிய கூட்டமும் நடத்தி வந்துள்ளனர். இதற்கான மைய இடமாக, திருச்சியை பாவா பக்ருதீன் பயன்படுத்தி வந்துள்ளார். கபீர் அகமது அலியாருடன் சேர்ந்து, சட்ட விரோதமாக நிதி திரட்டும் பணியிலும், ஈடுபட்டு வந்துள்ளார். இருவரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.
அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை ஆய்வு செய்தில், பாவா பக்ருதீன், கபீர் அகமது அலியாருடன் தொடர்பில் இருந்த சிலரின் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் விரைவில் சிக்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.