பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் 10 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் 10 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
ADDED : ஆக 21, 2025 01:21 AM
சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களுக்கு சொந்தமான, 10 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருபுவனத்தைச் சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம், 45, அப்பகுதியில் ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்ததால், 2019ம் ஆண்டு, மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
ரூ.5 லட்சம் இக்கொலை குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், தடை செய்யப்பட்ட, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பினர், ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
ராமலிங்கம் கொலைக்கு பின்னணியில், 18க்கும் மேற்பட்டோர் உள்ளதை கண்டறிந்தனர்.
அவர்களில் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வந்த, தஞ்சாவூர் மாவட் டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37; கும்பகோணம் மேலக் காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத், 37; தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், 31; திருமங்கலகுடியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, 30; நபீல் ஹாசன், 31 ஆகியோரை, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் பற்றிய தகவல் தருவோருக்கு தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். இதையடுத்து, ராமலிங்கம் கொலை வழக்கில், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போராட்டம் அந்த வகையில், கடந்தாண்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, பூம்பாறை என்ற இடத்தில், முகமது அலி ஜின்னா கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகியோர் கைதாகினர். புர்ஹானுதீன், நபீல் ஹாசன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில், திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில பொருளாளர் ேஷக் அப்துல்லா வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
அதேபோல, கொடைக்கானல், அண்ணா சாலையில் உள்ள முபாரக் என்பவரின் வீட்டிலும், அதே பகுதியில், ஆம்பூர் பிரியாணி கடை நடத்தி வரும் இம்தாத்துல்லா வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகர், கணவாய்பட்டி பகுதியில் உள்ள, முகமது அலி ஜின்னாவின் மாமனார் உமர் கத்தாப் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் பகுதியில், முகமது அலி வீட்டிலும் சோதனை நடத்தினர். மொத்தம் 10 இடங்களில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.