என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் பயிற்சி
என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் பயிற்சி
ADDED : ஆக 03, 2025 01:00 AM

நெய்வேலி:நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் மத்திய அரசின் நடடிக்கையாக, என்.எல்.சி., - சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, காஷ்மீரில், இந்திய ராணுவ அமைப்புகளில் சிறப்பு ஆயுத பயிற்சி அளிக்கப்படுகிறது.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு சதி வேலைகளை எதிர்த்து போராடுவதற்கு, ராணுவத்துடன் கூட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் பார்லிமென்ட் போன்ற இடங்களில் நெருக்கடியான காலக்கட்டத்தில் விரைவாக பதிலடி கொடுக்கவும், எதிரிகளை அழிக்கவும் ராணுவத்துடனான கூட்டு பயிற்சி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது, ட்ரோன் ஊடுருவல் போன்ற சிக்கலான, உயர் அழுத்த சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.
நாட்டில் முதல் முறையாக, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய ராணுவ அமைப்புகளில் ஆயுத பயிற்சி வழங்கி வருகிறது. நெய்வேலி என்.எல்.சி.,யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 10 பேர் இந்த பயிற்சியில் உள்ளனர்.

