ADDED : ஜன 01, 2025 01:22 AM
கம்பம்: கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை ஆய்வாளர் கிரேடு ---- 2 என நியமனம் செய்யப்பட்டு, மருந்தகங்களில் பணிபுரிவர். பதவி உயர்வு பெற்று கிரேடு - 1 என, கிராமங்களில் உள்ள கிளை நிலையங்களில் நியமிக்கப்படுவர்.
இவர்கள், கால்நடைகளுக்கு சினை பார்ப்பது, சினை ஊசி செலுத்துவது போன்றவற்றுடன், சிறு நோய்களுக்கு மருந்தும் கொடுப்பர். தமிழகம் முழுதும் உள்ள 6,000 கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்களில், தற்போது, 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த, 2011க்கு பின், 13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை. கிராமங்களில் உள்ள கிளை நிலையங்கள் பெரும்பாலானவை பூட்டப்பட்டு உள்ளன. இதனால், கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறியதாவது:
கால்நடை பராமரிப்பு துறையில், அனைத்து நிலைகளிலும் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, ஆய்வாளர் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன.
நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களால் நடந்த நியமனங்கள், தற்போது, டி.என்.பி.எஸ்.சி.,யால் நிரப்பப்படுவதால் தான் இந்த தாமதம்.
இவ்வாறு கூறினர்.

